blog Thumb

22 . 02 . 2021 - ஜெனிவாவில் விழுமா சுருக்கு?

                                  

இந்த ராணுவ அணி மயிலிட்டியில் தொடக்கி விக்டோரியா வரை ஹேமடன் என்ற பெயரில் களப்பயிற்சி ஒத்திகையைக் கடந்த வாரம் நடத்தியுள்ளது.

மயிலிட்டியில் இருந்து கடந்த 12 ம் திகதி 6 துருப்பு காவிகள்6 யுனிபவல் கவச வாகனங்கள் உள்ளிட்ட 47 வாகனங்களுடன் புறப்பட்ட இந்த ராணுவ அணி கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மடடகலப்பு மாவட்டங்கள் வழியாக பொலநறுவை மின்னேரியா ராணுவ முகாமை கடந்த16 ஆம் திகதி சென்றடைந்தன.

ஐந்து கட்டங்களாக வழி நெடுக பயிற்சிகளை மேற்கொண்ட படி சென்ற இந்த இராணுவ அணிக்கு 15 வது ஆடலொரி படைப்பிரிவில் உருவாக்கப்பட்டுள்ள ட்ரோம் அணி வழிகாட்டல், கண்காணிப்பு உதவிகளை வழங்கியிருக்கிறது.

இராணுவத்தின் 12 டெஜிமண்டுகளைக கொண்ட இந்த இராணுவ அணி மாலிக்குப் புறப்படத் தயாராகியுள்ள நிலையில், ஐ.நா அமைதிப் படையிலிருந்து இலங்கை ராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடமைக்கிறது.

இறுதிக்கட்ட போரில் குற்றச் சாட்டுகளை எதிர்கொண்டுள்ள இலங்கை இராணுவம் அதற்குப் பொறுப்பு கூறாத நிலையில் ஐ.நா அமைதி காப்பு நடவடிக்கைகளிலிருந்து விலக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஏற்கனவே பலமுறை இந்த கோரிக்கைகளை விடுத்திருந்தார்.

கடந்த 2019 ம் ஆண்டு ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளிலிருந்து இலங்கை இராணுவத்தை வெளியேற்றும் முடிவு ஐ.நாவினால் எடுக்கப்பட்ட போதும் மாலி போன்ற சிக்கலான களங்களில் இலங்கை படைகளை பணியில் அமர்த்துவதற்கு ஐ.நா இன்னமும் தடை விதிக்கவில்லை.

மாலி போன்ற ஆபத்தான நாடுகளில் பணியாற்றப் பல நாடுகள் பின்னடிப்பது இலங்கை ராணுவத்துக்குச் சாதகமான நிலையாக உள்ளது.

அண்மையில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் விச்செல் பாச்லேட் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.நா அமைதிப் படையில் இலங்கை படைகளின் பங்களிப்பை மீளாய்வு செய்ய வேண்டுமென்றும், கடுமையான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டுமென்றும் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்.

ஐ.நா அமைதிப்படையில் பங்கேற்கும் இலங்கை படையினரின் மனித உரிமை பதிவுகள் ஆய்வுக்குட்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுத் தொடர்ச்சியாக இருந்து வருகிறது.

இவ்வாறான நிலையில் தான மாலியில் பணியாற்றுவதற்கான அடுத்த அணியை இலங்கை ராணுவம் தயார்ப்படுத்தியிருக்கிறது.

இந்த அணிக்கான களப்பயிற்சி ஒத்திகைகள் யாவும் தற்போது ஐ.நாவின் அறிக்கைகளில் போர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளவரும் அமெரிக்காவினால் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளவருமான இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் மேற்பார்வையிலேயே இடம்பெற்றுள்ளன.

குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள இவ்வாறான அதிகாரிகளின் வழிகாட்டலில் தான் ஐ.நா அமைதிப் படைக்கு இலங்கை இராணுவத்தினர் தயார்ப்படுத்தப்பட்டு அனுப்பப்படுகின்றனர் என்று மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.

மாலியில் பணியாற்ற அடுத்த இராணுவ அணி தயாராகியுள்ள நிலையில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டு ஐ.நா மனித படையிலிருந்து இலங்கை இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறது யஸ்வின் சூக்கவை நிறைவேற்று பணிப்பாளராகக் கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்.

அத்துடன் யஸ்ட் செக்யூரிட்டி என்ற ஊடகத்தில் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில், போர்க் குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் இசுடீபன் இதே கருத்தை வலியுறுத்தியிருந்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இந்த கூட்டிடத்தொடரில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள தீர்மானத்தில் ஐ.நா அமைதிப்படையிலிருந்து இலங்கை இராணுவத்தை வெளியேறக் கோரும் விடயமும் உள்ளடக்கப்படக் கூடும்.

இவ்வாறான நிலை ஏற்பட்டால் மாலிக்குப் புறப்படவுள்ள இலங்கை இராணுவத்தினத்தின் பயணம் கேள்விக்குறியாக மாறுவதுடன், மாலி, தென்சூடான், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு உள்ளிட்ட சில நாடுகளில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் இலங்கை படையினரின் எதிர்காலமும் கேள்விக்குறியாக மாறும்.

முன்னர் ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கை படையினர் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றி வந்த போதும், இப்போது அந்த எண்ணிக்கை பாதிக்கும் மேலாக குறைந்துவிட்ட்து.

இலங்கை இராணுவத்துக்குப் புறம்பாக இலங்கை விமானப்படையும் ஐ.நா அமைதிப் படையில் வலுவான பங்களிப்பைச் செலுத்தி வருகிறது.

சூடான் மற்றும் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு ஆகிய இடங்களில் இலங்கை விமானப்படையின் தலா 110 பேர் கொண்ட அணிகள் எம்.ஐ 17 கேலி கெலி கோபடர்களுடன் நிலை கொண்டுள்ளன.

இலங்கை விமானப் படை மீது நேரடியான போர்க்குற்ற சாட்டுகள் சுமத்தப்படாவிடினும், போர்க் காலத்தில் பொது மக்கள் இலக்கு வைக்கப்பட்ட சந்தர்ப்பங்களுடன் விமானப்படை மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன.

இதனால் இலங்கை விமானப்படை அந்த குற்றச்சாட்டுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை.

இலங்கை விமானப்படையின் இரண்டாவது உயர்நிலை பதவியான விமானப்படை தலைமை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற எயர் வைஸ் மார்சல் பிரேமசந்திராவும் கூட பொதுமக்கள் விமானப் படையினால் இலக்கு வைக்கப்படவில்லை என்றே கூறிவந்தார்.

எயர் வைஸ் மார்சல் பிரேமசந்திராவின் மரண அறிவித்தல் கடந்த ஜெயிற்றுக்கிழமை வெளியாகியிருந்தது.

தொண்டமானரை பிறப்பிடமாகக் கொண்ட பாலசுந்தரம் பிரேமசந்திரா (பொபி ) என்று மட்டும் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அவர் முன்னாள் விமானப்படை அதிகாரி என்றோ பதவி நிலை பற்றியோ அதில் பிரசுரிக்கப்படவில்லை.

கோவிட் தொற்றினால் கடந்த 2 ம் திகதி லண்டனில் மரணமான அவரது இறுதிச் சடங்கு கடந்த புதன் கிழமை அங்கேயே இடம்பெற்றது.

இறுதிப் போரில் விமானப்படையின் நடவடிக்கை தளபதியாக இருந்த எயர் வைஸ் மார்சல் பிரேமசந்திரா பின்னர் விமானப் படை தலைமை அதிகாரியாகவும் பதவி வகித்தார்.

>